#தமிழ்மொழி_விழா_2016 தமிழ்மொழி விழா பட்டிமன்றம்
புதிய பார்வையாளர்களை ஈர்த்த பட்டிமன்றம்
தேக்காப் பகுதி அல்லாது வேறு இடத்தில் நடந்த ஒரு சில நிகழ்வில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்திய பட்டிமன்றமும் ஒன்றாகும். சிங்கையின் குடியிருப்புப் பேட்டை பகுதிகளுக்கும் தமிழ் மொழி விழாவை கொண்டுச் செல்ல வேண்டும் என்ற நம் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் சுவா சூ காங், ஐடிஇ காலேஜ் வெஸ்டில் நடந்த இந்த நிகழ்வு அமைந்தது. இரண்டு வெள்ளி நுழைவுச்சீட்டு இருந்தும் அங்கு சுமார் 500 பேர் கூடினார்கள். இதில், முக்கியமாக குறிப்பிட பட வேண்டிய விஷயம் அங்கு கூடியவர்களில் பொரும்பாலானோர் அக்கம்பக்கம் பகுதிகளில் வசிப்பவர்கள். பொதுவாக சில நிகழ்வுகளில், “இங்கு நிறைய மாணவர்கள் வந்திருக்கிறார்கள்” என்று ஒலிவாங்கியில் சொன்னவுடன் எல்லோரும் எங்கே என்று தேடுவார்கள். அப்படி இல்லாமல் இங்கு உண்மையிலேயே நிறைய மாணவர்கள் வந்திருந்தார்கள். எங்கும் புதிய முகங்களை காணமுடிந்தது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இந்நிகழ்வு நடத்தியிருந்தால் இவர்கள் வந்திருப்பார்களா என தெரியாது. காரணம் இதற்குமுன் உட்லாண்ட்ஸ் நூலகத்தில் நடந்த ஒரு நிகழ்விலும் புதியவர்களை நிறைய காண முடிந்தது. இரண்டு நிகழ்விலும் நான் அவர்களிடம் “எப்படி இந்த நிகழ்வில் மட்டும் கலந்துகொள்கிறீர்கள்” என்று வினவியபோது அவர்கள் கூறிய பதில் “வீடு பக்கத்தில் இருப்பதால் கலந்துக்கொள்ள முடிகிறது” என்பதுதான். அதற்காக முதலில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சிங்கப்பூர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்துத்துக்கும், அதன் தலைவர் ஐயா திரு யூசப் ராவுத்தர் ரஜீதிற்கு, லம் சூன் இந்தியர் நற்பணிச் செயற்குழுவிற்கும், குறிப்பாக திரு அருமை சந்திரனுக்கும் என் வாழ்த்துகள். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ——————————- உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி மாணவர்களிடம் தமிழ் பேச்சுத்திறனை வளர்க்கும் முயற்சியை முன்னெடுத்தது மற்றுமொரு சிறப்பு. சுமார் முப்பதுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கடந்த மாதம் நடைபெற்ற தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் சிரங்கூன் தொடக்கக் கல்லூரியின் செல்வன் தயாநிதி ராஜகோபாலான் முதலிடத்திலேயும் உயர்நிலைப் பள்ளி பிரிவில் ஃபூச் சூன் பள்ளியின் செல்வன் சுரேஷ் சங்கீத் முதலிடத்திலேயும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பன்னிரண்டு மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சி அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து நிறைய மாணவர்களை சென்றடைய வேண்டும். அதற்கான முன்னெடுப்பை பட்டிமன்றக் கலைக் கழகம் எடுக்கும் என நினைக்கிறேன். மாணவர்களுக்கு பேச்சு பயிற்சிகளை கொடுப்பதற்கு பட்டறைகளும் நடத்தலாம். அப்படி பட்டறைகள், போட்டிகள் நடத்தும்பொழுது ஏற்கனவே நடக்கும் போட்டிகளோடு குறுக்கிடாமல், ஒரே மாணவர்களை, பள்ளிகளை சென்றடையாமல் பரவலாக எல்லோரையும் சென்றடையுமாறு பார்த்துக்கொள்வது முக்கியம். பட்டிமன்றத்தில் மாணவர்கள் —————————- பொதுவாக போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசு வாங்கியவுடன் அந்த பயணம் முடிந்துவிடும். அப்படி இல்லாமல் இந்த மாதிரியான போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களை இனம் கண்டு அடுத்தகட்டத்திற்கு தயார்செய்து அவர்களை தொடர்ந்து தமிழ் இலக்கியக் களத்தில் இயங்கச் செய்வது என்பது மிக அவசியம். அந்த வகையில் பட்டிமன்றக் கலைக் கழகம் போட்டியில் இரு பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு தங்களின் பட்டிமன்றத்தில் பேச வாய்ப்புக்கொடுத்து அவர்களுக்கு நல்ல ஒரு களம் அமைத்து கொடுத்தது பாராட்டுக்குரியது. புதியவர்களை பேச வைத்தால் தங்களின் நிகழ்ச்சியின் தரம் குறிப்பாக பட்டிமன்றத்தின் தரம் குறைந்துவிடுமோ என்ற எந்த அச்சமும் இல்லாமல் மாணவர்கள் மேல் நம்பிக்கை வைத்து அவர்களை மேடையேற்றிய ஐயா திரு யூசப் ராவுத்தர் ரஜீதிற்கு என் மனமார்ந்த நன்றி. அந்த நம்பிக்கையை சிறிதும் பொய்த்துவிடாமல் செல்வன் தயாநிதியும், செல்வன் சங்கீத்தும் மிக அருமையாக பேசினார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தினரிடையே எந்த ஒரு தயக்கமுமில்லாமல் மிக தெளிவாக, அழகாக இருவரும் தங்கள் தரப்புக் கருத்துக்களை எடுத்துரைத்தனர். பட்டிமன்றம் ———— பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டுமா? நிதி ஒதுக்கவேண்டுமா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், நிதிதான் ஒதுக்க வேண்டும் என்ற தலைப்பில் பேசிய செல்வன் தயாநிதி இளையரை பிரதிநிதித்து மிக யதார்த்தமாக நகைச்சுவையுடன் தன் கருத்தை கொடுத்த நேரத்தில் பேசி முடித்தார். நேரம்தான் ஒதுக்க வேண்டும் என்று வாதிட்ட செல்வன் சங்கீத்தும் அவரின் சொந்த அனுபவத்தில் இருந்து சில எடுத்துக்காட்டுக்களை முன்வைத்து எந்த அவசரமுமில்லாமல் அழகாக பேசி எதிரணியில் இருந்த தன் அம்மா திருமதி ரம்யா சுரேஷை கொஞ்சம் யோசிக்க வைத்தார். அதே அணியில் பேசிய திருமதி அகிலா ஹரிஹரன் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை சரியாக பொருத்தி நேரம்தான் முக்கியம் என்று மிகச்சிறப்பாக பேசினார். ஆனால் அடுத்த தடவை கொஞ்சம் சத்தத்தை குறைக்கலாம். விடுவாரா ரம்யா அகிலாவுக்கு ஈடு கொடுத்து தன் வாதத்தை வைத்தாலும் இன்னும் கொஞ்சும் கருத்துகளை முன் வைத்திருக்கலாம். எதிரணியில் உள்ள தன் மகனை பார்த்து கொஞ்சம் பயந்து விட்டாரோ? அதிக நிதிதான் ஒதுக்க வேண்டும் என்ற அணியின் தலைவர் முனைவர் திருமதி ராஜி சீனிவாசன் எதற்கு நிதி வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து நன்றாக பேசினாலும் அவருடைய வழக்கமான வாதத்திறன் அன்று கொஞ்சம் குறைவாகவே காணப்பட்டது. நேரம்தான் ஒதுக்க வேண்டும் என்ற அணியின் தலைவர் திரு முகமது சரீஃப் முதலில் சற்று தொய்வுடன் ஆரம்பித்தாலும் கடைசியில் பல நல்ல வாதத்தை முன் வைத்து முடித்து வைத்தார். நடுவராக செயலாற்றிய முனைவர் பொன்ராஜுக்கு சிறப்புரையாற்றிய போது இருந்த வேகம் குறைந்துவிட்டது. அவர் சிறப்பு பேச்சாளராக நல்ல பல கருத்துகளை பார்வையாளரிடம் பகிர்ந்துக்கொண்டார். ஆனால் நடுவராக ஜொலிக்கவில்லை. மொத்ததில் நல்ல தலைப்புள்ள இந்த பட்டிமன்றம் மேலும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.