அப்பா தொலைக்காட்சி
செய்தியிலே லயித்துப் போக
அம்மா சாமியிடம் மணி
அடித்து வரம் வேண்ட
மனைவி பணிப்பெண்னுடன்
பட்டிமன்றம் நடத்த
மகன் கைப்பேசியோடு
கட்டிப் புரள
மகள் கார்ட்டூன்களுடன்
தனிக் குடித்தனம் பண்ண
வீட்டுத் தொலைப்பேசி தொந்தரவாய்
தொடர்ந்து ஒலிக்க
முகநூலில் முழுவதுமாய்
மூழ்கிப் போனான்
குடும்ப தலைவன்!
அலங்காரமாய் அவனுமுள்ளான்
வரவேற்பு அறையினிலே!
ஏதுமறியா கொலு பொம்மையைப் போல்!
Month: October 2015
ரசம் விட்ட சாபம்
“ஐயோ ரசமா!!!இதெல்லாம் தமிழன் கண்டுபிடிச்ச சூப். இதை ஒரு குழம்பா கன்சிடர் கூட பண்ண முடியாது”னு சொன்னான் என் பையன். “அவளுக்கு ஈஸியா வேலை முடியுனுன்றதுக்காக இந்த ர(வி)சத்தை வச்சு நம்மள கொல்லுறாடா. ஒரு சாம்பார், மோர்கொழம்பு இப்படி எதையாவது வைக்க வேண்டியதுதானே”னு நானும் ஒத்தூதினேன். உடனே சீதா, “உங்களையெல்லாம் ஆஃபிஸுல, எங்கேயாவது சீனா, ஜப்பான், கொரியானு இந்த ரசம் கூட கிடைக்காத இடத்துக்கு ஒரு ஆறு மாசம் வேலைக்கு அனுப்பனும், அப்பத்தான் தெரியும் என் சாப்பாடோட அருமை”னு சாபம் விட்டாள்.
அந்த சாபம் இவ்வளவு சீக்கிரம் பலிக்கும்னு நினைக்கல. அதுவும் இந்தியாவுல பலிக்கும்னு சத்தியமா கனவிலகூட நினைச்சு பாக்கல. வெளிநாட்டுக்கு பல முறை போயிருந்தாலும் இந்த தடவை பத்து நாள் புனேல இருந்தப்ப ஒரு முழு ‘கோமள விலாஸ்’ சாப்போடோ இல்ல குறைந்தபட்சம் ஒரு ‘சீதா விலாஸ்’ சாப்பாடோ கிடைக்காம கொஞ்சம் நாக்கு வறண்டு தான் போச்சு. ஆஹா, சாபம் பலிச்சிடுச்சோனு பயந்த சமயத்தில தங்கியிருந்த ஹோட்டல்ல நம்ம செஃப் நண்பர், “நான் ரசம் வச்சு தரேனு” சொன்னவுடன் மனசுக்குள்ள ‘போடி உன் சாபம் எல்லாம் ஒன்னும்
பலிக்காதுனு’ சொல்லிக்கிட்டேன். ஞாயிறு மதியம் உணவு, அறைக்கே வந்தது. ஒரு பீங்கான் குவளையோட மூடிய திறந்தா ஒரு திரவம் பல்லிளச்சது. அதுவும் என்ன மாதிரியே கலர்ஃபுல்லா இருந்துச்சு. அப்படியே மனச தேத்திக்கிட்டு சாதத்தில ஊத்தி வாயில வச்சா அறுசுவையும் ஒன்னா கலந்து வச்ச மாதிரி ஒரு ரசாபாசமான ரசக் கார கொழம்பு.
சரி இந்த சாபத்த வேலை செய்யவிடக்கூடாதுன்னு எப்படியும் அந்த ரசத்தை சாப்பிட்டே ஆகனும்னு ஒரு தென்னிந்திய உணவகத்தை தேடுனேன்.
‘சவுத் இண்டீஸ்’, அடடே!! பேரே நல்லாயிருக்கேனு மேற்கிந்திய நண்பரோட உள்ள போய் உட்கார்ந்தேன்.
“என்ன இருக்கு?”
“எல்லாம் இருக்கு!”
“ரசம் இருக்கா?”
“அது தான் முதல்ல கொடுப்போம்”
அப்பாடா, சாபம் புஸ்ஸ்ஸ்
“யாரங்கே!! முதல்ல கொண்டுவா அந்த ரசத்தை”னு கேட்டேன்.
ஒரு தட்டுல ‘பாணி பூரி’ வந்துச்சு. என்னடா ரசம் கேட்டா இத கொண்டு வரானே பார்த்தா, கூடவே நாலு ‘டெஸ்ட் டியூப்’ல கலர்கலரா தண்ணி வந்துச்சு.
ஆஹா நாமதான் எலியானு நினச்சுகிட்டே,
“என்னப்பா எங்கள வச்சு எதுவும் ஆராய்ச்சியெல்லாம் பண்ணலையே”னு கன்பர்ம் பண்ணிட்டு,
தக்காளி ரசம், மிளகு ரசம், புதினா ரசம், பைனாப்பிள் ரசம்னு நாலு வகையான ரசத்தையும் பூரில ஒரு ஓட்டை போட்டு ரசத்தை ஊத்தி அப்படியே சாப்பிட்டோம். நமக்கு சோறு இல்லாம ரசம் உள்ள போகல. எதுத்தாப்புல கவலையில்லாம உட்கார்ந்திருந்த பிரம்மச்சாரி வாங்கி வாங்கி பல லிட்டர் ரசம் குடிச்சிருப்பான்.
நமக்குத்தான் வாய்க்கு எட்டினது நாக்குக்கு எட்டல.
ரசக் கனவோடு ஒரு வழியா ஊர் வந்து சேர்ந்தேன்.
சீதாகிட்ட “இத்தனை நாளா வெளியே சாப்பிட்டது வயித்துக்கு ஒத்துக்கல இன்னைக்கு ரசம் வச்சு கொடேன்னு” கேட்டேன். மீசையில் மண் ஒட்டல. ரசத்தை பாசத்தோட போட்டா. அப்பா சாபவிமோசனம் கிடைச்ச மகிழ்ச்சில ஒரு வெட்டு வெட்டிட்டு படுக்க போனப்ப புரிஞ்சுது, இது சாபம் அல்ல சூழ்ச்சினு.
கல்யாண ஆனதிலிருந்து பல ஆண்டா நம்ம நாக்க ஒரு குறிப்பிட்ட டேஸ்டுக்கு ட்யூன் பண்ணி வுட்றாங்க. அதற்கு பிறகு நளபாகம் கூட இவங்க சமையல் மாதிரி இல்லேனு சொல்ல வச்சுராங்கன்னு முனுமுனுத்தேன். பக்கத்தில பையன் “என்னப்பா சொன்ன” என்றேன். “அது ஒன்னுமிட்லேடா இந்த ரசம் இருக்கே …” என்று ஆரம்பித்தவுடனே அங்க வந்த சீதா ” உங்களையெல்லாம் சீனா, ஜப்பான் ….” மறுபடியுமா!!?!!