ஆகாகான் அரண்மனை

ஆகாகான் அரண்மனை, புனே!

புனேயில், ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிடப்போகலாம்னு கல்யாணி நகர் நோக்கி போய்கிட்டுருந்தேன், சாலையிலிருந்து கொஞ்சம் உள்ளே ஒரு பெரிய நிலப்பரப்புல ஒரு பங்களா மாதிரி தெரிஞ்சது. ஓட்டுனரிடம் ‘இது யாரு வீடு? நல்ல பெரிசா இருக்கே’ என்று கேட்டேன். ‘இது வீடில்ல. ஆகாகான் அரண்மனை, சார்’ என்று சொன்னார். ஏதோ மைசூர் மகாராஜா அரண்மனை மாதிரி முகலாய மன்னரின் அரண்மனையா இருக்குமோ என்று நினைத்தேன். ஒரு ஆரவாரமும் இல்லாம இருக்கே ஒரு வேளை ஏதாவது சுதந்திர போராட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடமா இருக்குமோ என்று தோன்ற, ‘உள்ள போய்ப் பார்க்கலாமா’ என்று கேட்டேன். ‘ஓ பார்க்கலாமே’, என்பவரிடம் வண்டியத் திருப்பச் சொன்னேன்.

பச்சை பசேல் என்றிருந்த பரந்த புல்வெளி, மணம் வீசும் பூச்செடிகள், உயர்ந்த மரங்கள், நடுவே மூன்றடுக்கு மாளிகை, தெய்வீகம் நிறைந்த அமைதியான சூழல் மனதை பற்றியிழுத்தது.

வரவேற்பறையில், எங்கும் தனியாகக் கால் கடுக்க ஒரு குச்சியுடன் நிற்கும் காந்திஜி, இங்கே, தன் மனைவியின் தோளைபற்றிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். என்னடா கான் அரண்மனையில், மகாத்மா மனைவியுடன் நிற்கிறாரே, ஒரு வேளை அந்தக்காலத்தில இது அவருக்குக் ‘கொடநாடா’ இருந்திருக்குமோ என்று தோன்றியது. எதற்கும் இருக்கட்டுமே என்று பக்கத்தில் நின்று ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.

அடுத்து ஒரு அறைக்குச் சென்றால், அங்கு ஶ்ரீமதி சரோஜினி நாயுடு இருந்த அறை என்றிருந்தது.

அடுத்த அறைக்குச் சென்றால், அங்கு மகாத்மாவின் மடியில் அவர் மனைவியார், நோய்வாய்ப்பட்டுப் படுத்திருப்பது போல் ஒரு படம் இருந்தது.

அப்ப இது என்ன இடம்……

‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றிய பிறகு காந்திஜி, அவர் மனைவியார் திருமதி கஸ்தூரிபா, அவருடைய உதவியாளர் ஶ்ரீ மஹாதேவ்பாய் தேசாய், மீராபென், பியாரிலால் நய்யார், டாக்டர் சுசீலா நய்யார் மற்றும் ஶ்ரீமதி சரோஜினி நாயுடு அனைவரும் ஆகஸ்ட் 10, 1942ல் மும்பையிலிருந்து புனேவில் உள்ள இந்த ஆகாகான் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டனர்.

ஐந்தே நாட்களில், ஆகஸ்ட் 15, 1942ல் இந்த அரண்மனையில் தான், காந்திஜியின் உதவியாளர் ஶ்ரீ மஹாதேவ்பாய் தேசாய் மாரடைப்பால் காலமானார். திடீரென்று தன் உதவியாளர் மறைந்ததைக் காந்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த உடலை தானே குளிப்பாட்டி, சந்தனமிட்டு, ‘இதெல்லாம் நீ எனக்குச் செய்வாய் என்றிருந்தேனே, என்னை உனக்குச் செய்ய வைத்து விட்டாயே மகாதேவ்’ என்று கதறி அழுதார். அந்த உடலை அப்புறப்படுத்த வந்த ஆங்கிலேய அதிகாரிகளிடம் ‘எந்தத் தகப்பனும் தன் மகனின் உடலை வெளியாட்களிடம் ஒப்படைக்க மாட்டார். அவர் என் மகன் ஸ்தானத்தை விட மேலானவர், என்னை வெளிய சென்று அவரின் ஈமச்சடங்கினை செய்ய அனுமதிக்கவில்லை என்றால் பரவாயில்லை, என் நண்பர்களிடம் கொடுக்கிறேன்’ என்று சொன்னார். அதற்கு ஆங்கிலேய அதிகாரிகள் சம்மத்திக்கவில்லை. ஆதலால் தானே தீச்சட்டி சுமந்து சென்று அரண்மனையின் பின்னால் உள்ள வனத்தில் சிதைக்கு எரியூட்டினார். ‘செய் அல்லது செத்துமடி, என்ற மந்திரத்திற்கேற்ப வாழ்ந்து மறைந்த மகாதேவ்வின் இந்த மறைவு, விடுதலை வேட்கையைத் தீவிரப்படுத்தும்’ என்று மகாத்மா முழங்கினார். இங்கு தேசதந்தை ஓர் பாசத் தந்தையாக மிளிர்ந்தார்.

பிறகு மார்ச் 19, 1943ல் ஶ்ரீமதி சரோஜினி நாயுடு அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் இங்கிருந்து விடுவிக்கப்பட்டார்.

நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில், பிப்ரவரி 24, 1944ல், மகா சிவராத்திரி அன்று, மகாத்மாவின் துணை நின்ற அவரது மனைவியார் திருமதி கஸ்தூரிபாவும் காலமானார்.

காந்திஜியின் உதவியாளர் ஶ்ரீ மஹாதேவ்பாய் தேசாயின் உடல் தகனம் செய்த இதே அரண்மனையில், திருமதி கஸ்தூரிபாவின் உடலும் தகனம் செய்யட்டது. ஆம் இங்குதான் காந்திஜி மனைவியின் சமாதி உள்ளது.

நேராக அரண்மனையின் பின்னால் உள்ள ஒரு சிறிய வனத்தின் சமாதி இருக்கும் இடம் நோக்கி நடந்தேன். அங்கே உதவியாளர் சமாதி மற்றும் காந்திஜி மனைவியாரின் சமாதியும் உள்ளது. அதைச் சுற்றி வந்த நான் அவரது மனைவியார் சமாதி அருகே இருந்த காந்திஜியின் அஸ்தியின் ஒரு பகுதியை பார்த்து மனம் கலங்கினேன்.

நேராக வரவேற்பறைக்கு மீண்டும் சென்று, தன் மனைவியாரின் தோளைபற்றிக்கொண்டு காந்திஜி நிற்பதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்…..இங்கு தேசத்தந்தை தெரியவில்லை. அன்னை கஸ்தூரிபாயின் கணவர் தெரிந்தார். இப்போது செல்ஃபி எடுக்கத் தோன்றவில்லை. பக்கத்தில் கைகட்டி நிற்க, வேறொருவர் படம் பிடித்துக்கொடுத்தார்.

காந்திஜியின் மனைவி, குஜராத்துல இறந்திருப்பாங்கனு இவ்வளவு நாளா நினைச்சுகிட்டிருந்த எனக்கு, கணவருடன் சேர்ந்து அவரோட கொள்கைக்கும், போராட்டதிற்கும் துணை நின்று புனேயில் உயிர் நீத்தார் என்பதோ, அவருடைய சமாதி அங்கிருப்பதோ இவ்வளவு நாளாகத் தெரியாது.

சின்ன வயசில், அம்மா, மண்டையில குட்டிக்குட்டி வரலாறு சொல்லிக் கொடுத்தபோது, வேண்டா வெறுப்பாக, மதிப்பெண் பெறுவதற்காகப் படித்த வரலாற்றின் மதிப்பு அப்போதுதான் புரிந்தது!

குறிப்பு: சிறந்த ஆன்மீக தலைவரும், வள்ளலும், இராஜ பரம்பரையில் வந்தவருமான நான்காம் ஆகாகான், இமாம் சுல்தான் ஷா கரிம் ஆகாகான், 1969ல் இந்த அரண்மனையை நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்த அரண்மனை ‘காந்தி தேசிய நினைவகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

செய்தி ஆதாரம் : ஆகாகான் அரண்மனை கல்வெட்டுக்கள், காட்சிப் பொருள்கள், இணையம்!

Leave a Comment